Thursday, January 27, 2011

பாடல் 433: எந்தன் ஜீவன் இயேசுவே!

    Take my life, and let it be – 525
                  (Tune 289, 292 Of ESB)

1. எந்தன் ஜீவன் இயேசுவே!
    சொந்தமாக ஆளுமேன்;
    எந்தன் காலம் நேரமும்
    நீர் கையாடியருளும்

2. எந்தன் கை பேரன்பினால்
    ஏவப்படும் எந்தன் கால்
    பணிசெய்ய விரையும்
    அழகாக விளங்கும்

3. எந்தன் நாவு இன்பமாய்
    உம்மைப் பாடவும் என் வாய்
    மீட்பின் செய்தி கூறவும்
    ஏதுவாக்கியருளும்

4. எந்தன் ஆஸ்தி தேவரீர்
    முற்றும் அங்கீகரிப்பீர்
    புத்தி கல்வி யாவையும்
    சித்தம் போல் பிரயோகியும்

5. எந்தன் சித்தம் இயேசுவே
    ஒப்புவித்து விட்டேனே
    எந்தன் நெஞ்சில் தங்குவீர்
    அதை நித்தம் ஆளுவீர்

6. திருப்பாதம் பற்றினேன்
    எந்தன் நேசம் ஊற்றினேன்
    என்னையே சமூலமாய்
    தத்தம் செய்தேன் நித்தமாய்
                               Frances Ridley Havergal

பாடல் 434: நீ உயிர் பெறவே

    I gave my life for thee

1. நீ உயிர் பெறவே
    நான் இரத்தம் சிந்தினேன்;
    நீ மீட்கப்படவே
    நான் விலையாகினேன்;
    என் ஜீவன் நான் தந்தேன்!
    நீ என்னத்தைத் தந்தாய்?

2. சதா கால இன்பம்
    நீ பெற்று வாழ்ந்திட
    இவ்வுலகில் துன்பம்
    வந்தேன் சகித்திட;
    அநேகாண்டாய் பட்டேன் பாடு!
    ஓர் நாள் நீ தந்தாயா?

3. மகத்வ மாளிகை
    உனக்காய் நான் விட்டேன்;
    உலகின் வாதையை
    உனக்காய் சகித்தேன்;
    தந்தேனே நானென்னை!
    நீ கொணர்ந்தாய் எதை?

4. உன் ஜீவன் தத்தஞ்செய்
    உன் நேச மீட்பர்க்காய்;
    பூலோக வாழ்வு பொய்!
    ஜீவி நித்தியத்திற்காய்;
    குப்பையாய் உன்னெல்லாம் தந்து
    அவரைப் பின் செல்லு

பாடல் 435: நான் என் சொந்தமல்ல

    Not My Own - 514
          (Tune 389 Of ESB)

1. நான் என் சொந்தமல்ல ஆனால்
    வான் லோகக் கர்த்தன் சொந்தம்
    கோனேசு இரட்சகரே! உம்
    தேன் மொழி தூதை ஏற்றேன்

    பல்லவி

    எந்தன் சொந்தமல்லவே நான்
    உந்தன் சொந்தம் இயேசுவே!
    எந்தன் ஆஸ்தி ஆசை யாவும்;
    உமதே எப்போதுமே

2. ஒப்புவித்தேன் யாவையுமே
    இப்போதே என் கர்த்தனே;
    நம்பி எந்தன் ஆத்துமத்தை
    அம்பரா! அர்ப்பிக்கிறேன் - எந்தன்

3. எந்தன் காலம் தாலந்துகள்
    எந்தன் பாதம் வைக்கிறேன்
    மன்னன் நாம மகிமைக்காய்
    என்றுமே சேவை செய்வேன் - எந்தன்

4. இயேசுவே நீர் என்னையுமே
    நேசமாய் ஏற்றிடுமேன்;
    பரத்திலவர் மகிமை
    நரன் நானும் காணுவேன் - எந்தன்
                                  Daniel W. Whittle

பாடல் 436: இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை

    இராகம்: தோடி தாளம்: ஆதி

    பல்லவி

    இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை - போட்ட
    எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து

    அனுபல்லவி

    இயேசு காணிக்கைப்பெட்டிக் கெதிரில் உட்கார்ந்து
    எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து

    சரணங்கள்

1. தனவான்கள் தமக்குள் சம்பத்தில் சிலதட்ட
    கனவான்கள் பெரியோர்கள் கனபணங்களைக் கொட்ட
    தனக்குள்ள யாவையும் சமூலமா யீந்திட்ட
    மனப்பூர்வமான மனதினைக் கூர்ந்திட்ட - இயேசு

2. விசனம் கட்டாயமாய் விரைவதகல் முற்றும்
    வசையுற ஒன்றையும் வழங்காதே நீ சற்றும்;
    கபடற்ற ஆபேலின் தன்மையைப் பின்பற்றும்
    பிசகுறா நண்பர்கள் பேரில் தயையுறும் - இயேசு

3. பொற் பரத்தில் தமக்குப் பொக்கிஷங்களைச் சேர்க்கும்
    நற்குணருக்கு வெகு நன்மைகளை யளிக்கும்
    கர்த்தருக் கிதயத்தைக் காணிக்கையாய் படைக்கும்
    உற்சாகத்தோரிடம் பாசமாக வசிக்கும் - இயேசு

Wednesday, January 19, 2011

பாடல் 437: வந்திடும் எம் கிருபாகரா

    இராகம்: ஆனந்தபைரவி தாளம்: ஆதி
   
    பல்லவி
   
    வந்திடும் எம் கிருபாகரா ஏற்றிடும் எங்கள்
    சொந்தக் காணிக்கைகளை; அன்பாய்

    அனுபல்லவி

    எங்கள் குறைகள் யாவும் நீர் இரங்கிப் பொறுத்தருள்வீர்
    பங்கமில்லா எம் முயற்சி பலன் பெறத் தாரும் மாட்சி!

    சரணங்கள்

1. கர்த்தனே எல்லா ஜனத்தையும் - காணிக்கை தர
    உத்தமா நீ ஏவியே விட
    இத்தருண மிங்கு கூடி இறைவா யுமையே வேண்டி
    பக்தியோடெங்களையுமே படைத்து மன்றாடுகிறோம்

2. துட்டரெமை மீட்டவேயெம் - கர்த்தாவே நீரும்
    இட்டமுடன் பாடுபட்டீரே
    கிட்டியுந்தன் பாதம் வந்து கொடுக்கும் எம் காணிக்கையை
    மட்டில்லாக் கிருபையுடன் மன்னா ஏற்றுக் கொள்ளுமையா 
                                                                                              K.S Abraham

பாடல் 438: என்ன காணிக்கை படைப்பேன்?

    இராகம்: ஹரிகாம்போதி தாளம்: திஸ்ரசாப்பு

    மெட்டு: எத்தனை நாவால் துதிப்பேன்

    பல்லவி

    என்ன காணிக்கை படைப்பேன்? - நான்
    இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில்

    அனுபல்லவி

    பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னை
    என்னுயிரைவிட யாதுண்டு வேறே

1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் - இனி
    எனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்
    தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்
    தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் - என்ன

2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய - திவ்ய
    ஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்ல
    சிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்ல
    தேவா துணை புரி சாட்சி நான் சொல்ல - என்ன

3. என்னில் தங்கி அரசாள்வீர் - எந்தன்
    இருதயத்தில் மெய்ச் சந்தோஷத்தைத் தருவீர்
    மன்னா வாசலைத் திறந்தேன் நீர் வாரீர்
    மகத்துவமாக நீர் பிரகாச மீவீர் - என்ன

Friday, January 14, 2011

பாடல் 439: ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா

    இராகம்: சிந்து தாளம்: சாப்பு

    பல்லவி

    ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
    ஏல ஏலோ இயேசையா

    சரணங்கள்

    அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
    அழைத்து வந்தோம் சேனையாரை;
    காலை முதல் மாலை வரை - இயேசையா
    கடினமாக வேலை செய்தோம்
    மாரியிலும் கோடையிலும் - இயேசையா
    மட்டில்லாத வருத்தத்துடன்,
    தேவன் தந்த நஞ்சை நிலத்தை,
    சமமாக வெட்டி ஏர்களுமுழுது,
    கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கி
    இல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,
    வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,
    களையும் பறித்து நெற்பயிராக்கி,
    நாலு பக்கமும் வேலியடைத்து,
    நாற்கால் மிருகங்கள் வராதபடி,
    காவலுங் காத்தோம் ஏழைகள் நாங்கள்
    தானியம் முற்றி அறுத்துப் போர் செய்து
    கர்த்தருக்குக் காணிக்கை கொண்டுவந்தோமே

Sunday, January 9, 2011

பாடல் 440: சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

    பல்லவி

    சேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
    சேனையிலே வீரராக

    சரணங்கள்

    கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
    கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;
    கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;
    கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,
    தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,
    சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,
    சுட்டி விரியன், சித்திரைக்காலி,
    சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,
    பொட்டல் விளையும் புழுதி புரட்டி,
    புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,
    குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,
    குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்
    கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பா
    கல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,
    வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,
    வீரியடங்கான், வாசிறமிண்டான்;
    குட்டநாடுமயில், குலமறியன்சார,
    கோடனாரியன் முட்டகன் செந்நெல்,
    கட்டி வெள்ளைப் பூதகாளி கருப்பன்,
    காடன், வயல் தூவ கண்ணன் ஞாவுரா,
    திட்டமுடன் அரிக்கிராவி, முதலான நெல்லுகள்
    தென்னிந்தியாவெங்கும் சீராய் விளைந்து
    பட்சமுடன் இரட்சணிய சேனையார் வந்து
    கூடவும், பாடவும், தேவனைப் போற்றவும் - சேர்

பாடல் 441: இரட்சணிய சேனை வீரரே நாம்

    ல்லவி

    இரட்சணிய சேனை வீரரே நாம்
    எல்லோரும் கூடுவோம்!

    அனுபல்லவி

    பட்சமுடன் தேவன் தமக்குச் செய்த
    நன்மையைக் கொண்டாட

   சரணங்கள்


1. பட்சிகள், விலங்கு, ஊர்வன ஜீவன்கள்
    பசியாறிப் பிழைக்க,
    பசுமையாகப் புற்பூண்டு விருட்சங்கள்,
    பார் தழைத் தோங்கியதே - இரட்சணிய

2. விதைத்த விதைகள் முளைக்க மழையை
    மிதமாக பொழிந்து,
    விந்தையாகப் பயிர் ஏற்ற காலத்தில்
    விளையச் செய்தாரே - இரட்சணிய

3. ஒற்றைத் தானியம் ஓங்கி வளர்ந்து,
    ஒன்பது நூறாக
    வர்த்தனை யாக்கியன வல்லமைத் தேவனை
    வாழ்த்திப் புகழ்ந்திடுவோம் - இரட்சணிய

4. அழுகையோடு நாம் நிலத்தை விதைத்து
    அநேக நாள் உழைத்து
    அறுத்துப் போர்தனை அடித்துப் புசித்து
    ஆனந்தம் கொண்டோமே - இரட்சணிய

5. தானியம் பண்டகசாலையிற் சேரும்
    தகைமையைப் போல
    வானவரறுப்பில் மாளிகை சேரும்
    மணிகள் போலிருப்போம் - இரட்சணிய