இராகம்: காம்போதி தாளம்: சாப்பு
பல்லவி
எங்கும் நிறை தூயனே இவ்வீட்டினில்
தங்கும் கிருபை சீலனே - எம் இறைவனே
அனுபல்லவி
அனுபல்லவி
அண்டமெல்லாம் மகிழ அவதாரம் ஆனவனே
ஆசி இவ்வீட்டிற்கு அளித்திடுவாய் பரனே
சரணங்கள்
1. கங்குல் பகல் ஜெபத்தூபம் விண் ஏறவும்
மங்கா மறையோதல் செவிகளில் கேட்கவும்
சங்கை மிகும் ஞானப் பாடல்கள் பாடவும்
துங்கா நின் தலைமையில் தூய வீடாக்கிடும் - எங்கும்
2. உத்தமராய் தேவ புத்திரராய் வாழ
பக்தியுடன் பண்பும் பரிவும் மிகக்கொண்டு
பெத்தானியா ஊரின் குடும்பம் தனைப்போன்று
நித்தம் நல்விருந்தாக ஏற்றிட இயேசுவை - எங்கும்
3. குன்றின் மேலேயுள்ள மனையே போல் விளங்கிட
குவலயத்தோர்க்கு நல் மாதிரியாய் நிற்க
கலை உடை கல்வி கனிவு முயற்சியில்
கர்த்தருக்கேற்ற பரிசுத்தக் குடும்பமாக - எங்கும்
4. இங்குறை காலம்வரை துங்கன் மொழிக்கிசைந்து
பங்கமில்லாமல் பரன் சித்தப்படி நடந்து
அங்கம் மனது யாவும் ஆண்டவனுக்கே படைத்து
புங்கமுடன் நிதமும் தங்க இயேசு பரனில் - எங்கும்
No comments:
Post a Comment